search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியை நிறைமதி கிகி ஜாங்
    X
    ஆசிரியை நிறைமதி கிகி ஜாங்

    சீனாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பற்றி நடத்திய பாடம்- டுவிட்டரில் பதிவிட்டு ஆசிரியை பெருமிதம்

    சீனாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பற்றி பாடம் நடத்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான காட்சியை அங்குள்ள ஆசிரியை தனது டுவிட்டரில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 4, 5, 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன.

    தற்போது 2021-ம் ஆண்டுக்கான 7-ம் கட்ட அகழாய்வு மாநில தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. இதில் 6, 7-ம் கட்ட அகழாய்வுகள் கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    கீழடி அகழ்வாராய்ச்சி தமிழர்களின் பெருமை, வரலாற்றை உலகறிய செய்துள்ளது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் சீனாவில் உள்ள பல்கலைக்கழகமான “யுனான் மின்சூவில்” தமிழ் துறை மாணவர்களுக்கு கீழடி அகழாய்வு, தமிழர் பாரம்பரியம், வாழ்வியல் முறை பற்றி ஆசிரியை “நிறைமதி கிகி ஜாங்” பாடம் நடத்தியுள்ளார். அந்த காட்சியை தனது டுவிட்டரிலும் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    சீன ஆசிரியை டுவிட்டரில் பதிவிட்ட படம்.

    ஆசிரியை நிறைமதி கிகி ஜாங், சீனராக இருந்தாலும் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். அதனால்தான் தனது பெயரை நிறைமதி என மாற்றி இருக்கிறார். தமிழகத்துக்கு இவர் ஏற்கனவே வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அதன்பின்பு தமிழ் கற்க தொடங்கினார். சீன வானொலியில் தமிழ் பிரிவிலும் பணியாற்றியவர். அதன்பின்புதான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாகி, தமிழ் கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×