என் மலர்
செய்திகள்

தற்கொலை
சென்னிமலை அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னிமலை அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் தங்காரா பகுதியை சேர்ந்தவர் ஷாபி பத்ரா (வயது 17). இவர் கடந்த 6 மாதங்களாக சென்னிமலை அருகே அசோகபுரத்தில் உள்ள தனியார் நூல் மில்லுக்கு சொந்தமான அறையில் நண்பர்களுடன் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஷாபி பத்ராவின் நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். ஷாபி பத்ரா மட்டும் அறையில் இருந்தார். மாலையில் நண்பர்கள் அனைவரும் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஷாபி பத்ரா இல்லை. இதனால் பல இடங்களில் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தொழிலாளி ஒருவர் நூல் மில்லுக்கு சொந்தமான அறைக்கு வேலை விஷயமாக சென்றார். அப்போது அங்கு ஷாபி பத்ரா இரும்பு கம்பியில் துணியால் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்தார். உடனே இதுபற்றி சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஷாபி பத்ராவின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஷாபி பத்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






