search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் பெய்த சாரல் மழைக்கு பொதுமக்கள் குடைபிடித்தபடி செல்வதை படத்தில் காணலாம்.
    X
    வேலூரில் பெய்த சாரல் மழைக்கு பொதுமக்கள் குடைபிடித்தபடி செல்வதை படத்தில் காணலாம்.

    வேலூரில் 2 வது நாளாக சாரல் மழை - சேறும், சகதியுமான சாலைகளால் பொதுமக்கள் அவதி

    வேலூரில் 2-வது நாளாக சாரல் மழை பெய்தது. சேறும், சகதியுமான சாலைகளில் நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினார்கள்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு வரை பெய்தது. இதேபோன்று காட்பாடி, குடியாத்தம், பொன்னை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகவும், சில இடங்களில் லேசாகவும் மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் வேலூர் நகரில் 2-வது நாளாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சூரியன் தென்படவில்லை. சிறிதுநேர இடைவெளியில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைகோட் அணிந்தபடியும், பொதுமக்கள் குடைபிடித்தப்படி சென்றதையும் காணமுடிந்தது. சாலையோர பள்ளங்கள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    வேலூர் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், கழிவுநீர் கால்வாய், காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழையினால் இந்த சாலைகள் சேறும், சகதியுமானது. அதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சேற்றில் சிக்கி கீழே விழும் நிலை காணப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர்- 31.4, மேல்ஆலத்தூர்- 28.4, காட்பாடி- 23.8, அம்முண்டி சர்க்கரை ஆலை- 23, குடியாத்தம்- 21.4, பொன்னை- 19.2.
    Next Story
    ×