search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசங்கர் பாபா
    X
    சிவசங்கர் பாபா

    சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது -சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

    சாமியால் சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த புகார்கள், பின்னர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சென்று, விசாரணை நடைபெறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். 

    இந்நிலையில், தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக்கொண்டு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அவர் நடத்தி சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. 

    இதனையடுத்து, சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இதய அறுவை சிகிச்சை செய்து, சிகிச்சை பெற்று வருவதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகினார். 

    சிபிசிஐடி

    இந்நிலையில், மூன்று மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் 
    போக்சோ
     உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொலை மிரட்டல் உள்ளிட்ட சில பிரிவுகளும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சிவசங்கர் பாபா உடனடியாக விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லாததால், சென்னையில் இருந்து போலீசார் டேராடூன் சென்று விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×