search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 சிங்கங்களின் உடல்நிலை மோசமாக உள்ளது - வண்டலூர் பூங்கா அதிகாரி தகவல்

    வண்டலூர் பூங்கா ஊழியர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை செய்ததில் 3 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தாம்பரம்:

    வண்டலூர் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கடந்த 3-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    அன்றே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. மற்ற சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    இதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 வயதான கவிதா, 19 வயதான புவனா என்ற 2 பெண் சிங்கங்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. 2 சிங்கங்களையும் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிங்கங்களை தொடர்ந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

    நேற்று காலை வண்டலூர் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதையும் படிங்க... வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்த நிலையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட கவிதா, புவனா ஆகிய 2 சிங்கங்களின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது.

    இது குறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் அனைத்தையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள 2 சிங்கங்களின் உடல்நிலையும் மோசமாக உள்ளன.

    இதற்கு வயது மூப்பு காரணமாக மருத்துவ குழுவினர் சிங்கங்களின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மற்ற விலங்குகளுக்கு நோய் தொற்று பரவவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே வண்டலூர் பூங்கா ஊழியர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை செய்ததில் 3 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர்கள் மூலம் சிங்கங்களுக்கு நோய் தொற்று பரவியதா? என்று அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×