என் மலர்
செய்திகள்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அலட்சியத்தால் கொரோனா நோயாளி இறந்ததாக உறவினர்கள் புகார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் வி.அய்யாசாமி (வயது 45). இவர் மூச்சுச்திணறல் காரணமாக கடந்த 20-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது இடது கண்ணில் வீக்கம் திடீரென ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கடந்த 29-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 30-ந்தேதி அய்யாசாமி பரிதாபமாக இறந்தார்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு டாக்டர் கூட அவரை வந்து பரிசோதித்து பார்க்கவில்லை என அய்யாசாமியின் உறவினர் ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு மாற்றினோம்.
ஆனால் 2 நாட்கள் எந்த டாக்டரும் வந்து பார்க்க வில்லை. இறந்த பின்னரே டாக்டர்கள் வந்தனர். அய்யா சாமிக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பா? அல்லது வேறு பிரச்சினையா? என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்.
இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி மூத்த டாக்டர் ஒருவர் கூறும் போது, அய்யாசாமிக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதற்கு முன்னதாக அவர் இறந்து விட்டார் என கூறினார்.






