என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்மலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்ததை காணலாம்
    X
    பிரான்மலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்ததை காணலாம்

    ஊரடங்கிலும் களை கட்டிய விவசாய பணிகள்- கடலை அறுவடை தீவிரம்

    சிங்கம்புணரி அருகே ஊரடங்கிலும் விவசாய பணிகள் களை கட்டி உள்ளன. தற்போது கடலை அறுவடை தீவிரம் அடைந்து உள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே பிரான்மலை மலை அடிவார பகுதியில் ஒடுவன்பட்டி, முட்டாகட்டி, பிரான்மலை, கோபாலச்சேரி, கிருங்கா கோட்டை, வேங்கைபட்டி, எஸ்.வி.மங்கலம், மேலவண்ணாரிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். மழைநீரை நம்பி தான் விவசாயம் செய்யப்படுகிறது.

    கோடை பயிரான மாசி பட்டத்தில் பயிரிட்ட கடலை பயிர் மூன்று மாத காலத்தில் முளைத்து தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டது. கொரோனா பரவலை தடுக்க அரசு வருகிற 7-ந்தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. முழு ஊரடங்கில் விவசாய பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிங்கம்புணரி பகுதியில் ஊரடங்கிலும் விவசாய பணிகள் களை கட்டி உள்ளது.

    விவசாயிகளுக்காக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை உரக்கடைகள் திறக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.விவசாயிகள் தாங்கள் பயிரிடப்பட்டு உள்ள பயிருக்கு ஏற்ற உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரான்மலை பகுதியில் நிலக்கடலை அறுவடை தீவிரம் அடைந்து உள்ளது. விவசாய கூலி தொழிலாளர்கள் நிலக்கடலை அறுவடை செய்தனர். ஒரு ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு 25 பேர் கடலை அறுவடை மேற்கொண்டால் 7 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம் என்று விவசாயி ஒருவர் கூறினார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலையாட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    கொரோனா அச்சத்தால் பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. மேலும் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அறுவடை செய்த நிலக்கடலையை எப்படி விற்பது என தெரியாமல் தவித்து வருகிறோம். நிலக்கடலையை பதப்படுத்தி ஆயில் மில்நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தால் தான் நஷ்டமின்றி தப்பிக்க முடியும். தற்போது ஊரடங்கு, கடையடைப்பு உள்ளிட்டவைகள் காரணமாக அறுவடை செய்த விவசாய விளை பொருட்களை எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை தான் நிலவுகிறது என்று விவசாயி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
    Next Story
    ×