search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறம்பக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குவதை காணலாம்.
    X
    கறம்பக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குவதை காணலாம்.

    பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்- வாங்க ஆள் இல்லாததால் செடியிலேயே கருகும் அவலம்

    திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கோவில்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை. இதனால் பூக்களுக்கான தேவை குறைந்து வாங்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி தாலுகாவில் உள்ள கறம்பக்குடி தென்னகர், தட்டாவூரணி, மஞ்சுவிடுதி, திருமணஞ்சேரி, சூரக்காடு, வெட்டன் விடுதி, மழையூர், துவார், கொண்டையம்பட்டி, அம்புக்கோவில், ரெகுநாதபுரம், செங்கமேடு, மருதன் கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    சாமந்தி, செண்டி, கோழி கொண்டை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் அதிகம் சாகுபடி செய்வது வழக்கம். திருவிழா மற்றும் முகூர்த்த காலங்களில் பூக்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்றவகையில் கறம்பக்குடி பகுதியில் பூக்கள் சாகுபடியும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில்கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கோவில்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை. இதனால் பூக்களுக்கான தேவை குறைந்து வாங்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. அறுவடைக்கு தயாராக உள்ள பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால் பூக்கள் செடியிலேயே கருகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து கறம்பக்குடியில் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், பராமரிப்பு செலவு குறைவு, தண்ணீர் அதிகம் தேவை இல்லைபோன்ற காரணங்களால், பூக்கள் சாகுபடி செய்வதில் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பூக்கள் நல்ல விற்பனையாகும் வேளையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாததால் பூக்கள் விற்பனை முற்றிலும் நின்றுவிட்டது.

    கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி என்பதால் வியாபாரிகள் பூக்களை வாங்குவதில்லை. இதனால் பூக்களை குப்பையில் வீசி செல்லும் நிலை உள்ளது. எனவே பூக்கள் பறிக்கும் செலவாவது மிச்சமாகும் என்ற நிலையில் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டோம். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×