search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டு சேலைகள்
    X
    பட்டு சேலைகள்

    சேலம் மாவட்டத்தில் ரூ.200 கோடி பட்டு வேட்டி, சேலைகள் தேக்கம்

    கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 கோடிக்கு மேல் பட்டு சேலைகள் தமிழகத்தில் தேக்கம் அடைந்துள்ளன.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நெய்க்காரன்பட்டி, கொண்டலாம்பட்டி, புத்தூர், பஞ்சுகாளிப்பட்டி, மேச்சேரி, ஓமலூர், சிந்தாமணியூர், செம்மாளப்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், தருமபுரி மாவட்டம் அரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் கைத்தறி பட்டு ரகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    கொரோனா முதல் அலையால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வந்த நிலையில் கொரோனா 2- வது அலையால் மீண்டும் பட்டு சேலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

    கர்நாடாக, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஊரடங்கால் அந்த மாநிலங்களுக்கு பட்டு சேலைகள் விற்பனைக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்களுக்கு சேலைகள் அனுப்பப்படும் நிலையில் பணப்பட்டு வாடாவில் தாமதம் ஏற்படுகிறது.

    இதனால் பட்டு சேலை உற்பத்தி 30 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 கோடிக்கு மேல் பட்டு சேலைகள் தமிழகத்தில் தேக்கம் அடைந்துள்ளன. இதே போல சேலம் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, கருங்கல் பட்டி பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட வெண் பட்டு வேட்டி, துண்டு தயாரிப்பு கூடங்களில் உற்பத்தியில் 30 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்ல வேண்டி ரூ. 50 கோடி மதிப்புள்ள பட்டு வேட்டி, சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

    தேர்தல் முடிவுக்கு பின் தமிழக அரசு முழு ஊரடங்கை அமுல்படுத்தினால் பட்டு தொழில் மேலும் பாதிப்பு அடையும். சேலம் உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டு தறிக்கூடங்கள் மூடப்படும் நிலை உள்ளதால் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே நெசவு தொழில் பாதிக்காதபடி கட்டுப்பாடுகளில் தளர்வு வேண்டும், தற்போது பட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதால் அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும், ஊரடங்கு அமுல்படுத்தினால் காஞ்சிபுரம், மதுரை, சேலத்தில் மூடப்பட்டுள்ள கைத்தறி பட்டு விற்பனை கூடங்களுக்கு தளர்வு அளித்து செயல்பட அரசு உத்தரவிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×