search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் இடம் பொதுமக்கள் யாருமின்றி வெறிச்சோடி கிடந்த காட்சி
    X
    தடுப்பூசி போடும் இடம் பொதுமக்கள் யாருமின்றி வெறிச்சோடி கிடந்த காட்சி

    ஜெயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

    ஜெயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம்(மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் தகவல்களால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் உள்ளது. இருப்பினும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் இணைந்து எடுத்துவரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் தற்போது பொதுமக்களிடையே குறைந்து வருகிறது.

    இதனால் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் தற்போது தடுப்பூசி போடும் எண்ணம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏராளமானவர்கள் தடுப்பூசி போட வருவதால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கே தற்போது தடுப்பூசி இல்லாத சூழ்நிலையில், முதல் தவணை தடுப்பூசி ேபாட்டுக்கொள்ள வருபவர்கள், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இருப்பினும் அவர்களுடைய பெயர் மற்றும் செல்போன் எண்ணை, மருத்துவமனை ஊழியர்கள் குறித்துக்கொண்டு, தடுப்பூசி வந்தபின் உரிய நேரத்தில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறுகின்றனர். நேற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கையிருப்பில் இருந்த 10 தடுப்பூசிகளை மட்டும் பொதுமக்களுக்கு போட்டதாக செவிலியர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×