என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பர்கூர் அருகே கொரோனா நெகடிவ் சான்றிதழ் போலியாக தயாரித்த வாலிபர் கைது

    போலியாக கொரோனா நெகட்டிவ் என பயணிகளுக்கு சான்றிதழ் தயாரித்து, அரசு மருத்துவர் கையெழுத்து, அரசு மருத்துவமனை சீல் போன்றவற்றை வைத்து கொடுத்து வந்துள்ளார்.

    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(29). இவர் பர்கூரில், திருப்பத்தூர் சாலையில் லட்சுமிகணபதி ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஆபிஸ் நடத்தி வந்தார். இவர் விமானம் மற்றும் சொகுசு பேருந்து, ரயில் போன்றவற்றிற்கு டிக்கெட் புக்கிங் செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இவர் போலியாக கொரோனா நெகட்டிவ் என பயணிகளுக்கு சான்றிதழ் தயாரித்து, அரசு மருத்துவர் கையெழுத்து, அரசு மருத்துவமனை சீல் போன்றவற்றை வைத்து கொடுத்து வந்துள்ளார்.

    குறிப்பாக பர்கூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ரயிலில் பயணம் செய்ய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்பதால் இவ்வாறு போலி சான்றிதழ் தயாரித்து டிக்கெட் புக் செய்து கொடுத்து வந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர். கலையரசி பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து, தினேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×