search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா- பொதுமக்கள் அச்சம்

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 106 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16,229 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 498 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் 106 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,335 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு சதத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வர வேண்டும் என்றும் அவ்வாறு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வருதல் வேண்டும், அவ்வப்போது சானிடைசரால் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியே பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×