search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்- நாராயணசாமி தாக்கு

    காங்கிரசுக்கு துரோகம் செய்து ஆட்சியை கவிழ்த்தவர்கள் போட்டியிட தொகுதி கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மதவாத சக்திகளோடு இணைந்துள்ளார். இதன்மூலம் மக்களின் உணர்வுகளை அவர் புறக்கணித்துள்ளார். அதை பிரதிபலிக்கும் வகையில் வைத்தியநாதன் இங்கு வந்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இணைய பலர் வந்து கொண்டுள்ளனர். இதற்கு முன் நடந்த தேர்தலில் டெபாசிட் இழந்த நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளது. சில துரோகிகளும் அவர்களுக்கு துணைபோய் விட்டனர். அதன் பலனை தற்போது அனுபவிக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் பதவிக்காக சென்றவர்கள் தற்போது போட்டியிட தொகுதி இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள். புதுவை மக்கள் அனைத்து மதத்தையும் மதிப்பவர்கள். மதவாத சக்திகள் ஒற்றுமையை குலைக்கக் கூடாது என்பதற்காக ஒருங்கிணைந்து நாங்கள் செயல்படுகிறோம்.

    பா.ஜ.க.வினர் சிலரை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை கொண்டும், பணபலம், அதிகார பலத்தை வைத்தும் சிலரை பிடித்து ஆட்சியை கவிழ்த்தார்கள். நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சியை கவிழ்த்த சம்பவம் இந்தியாவில் எங்கும் நடந்தது கிடையாது. அதன் விளைவுகளை இந்த தேர்தலில் சந்திப்பார்கள்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×