search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.

    பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை: டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகை

    புவனகிரி அருகே டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புவனகிரி:

    புவனகிரி அருகே பு.உடையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர், டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில் அவர்கள் மயக்க நிலைக்கு சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து பள்ளி மாணவர்களுக்கு ஏன்? மதுபாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் என்று மேற்பார்வையாளரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர் உரிய பதில் கூறவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுசம்பந்தமாக விசாரிப்பதற்காக மேற்பார்வையாளர் மற்றும் அவருடைய உதவியாளர் ஒருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×