search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    திடீரென்று தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் கமி‌ஷன்

    திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தன.

    இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நேற்று மாலை தேர்தல் தேதியை அறிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    இதனால் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாது. அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

    தமிழக அரசு சார்பில் 28-ந்தேதி வரை பல்வேறு திட்ட தொடக்க விழா, போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கும் விழா, மாணவ-மாணவிகளுக்கு உதவிகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொடக்க விழா, உதவி வழங்கும் திட்டங்கள் ஆகியவை அரசு அதிகாரிகள் மூலம் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. சார்பில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இதுவரை நடந்த பிரசாரத்துக்கு அதிக கட்டுப்பாடுகள் இல்லை. இனி நடைபெறும் பிரசாரம் மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ள தேர்தல் நடத்தை விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும். செலவு கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. சார்பில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தனர். தி.மு.க. சார்பில் தேர்தல் மாநாடு, பொதுக்குழுவை கூட்டுதல் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தன. தற்போது அனைத்து நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    இதுவரை கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து கவலைப்படாமல் இருந்த கட்சிகள் இப்போது அதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

    Next Story
    ×