search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்ட காட்சி.
    X
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்ட காட்சி.

    புதுச்சேரி, கடலூரில் கொட்டித்தீர்த்த கனமழை : வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

    புதுவை, கடலூரில் கொட்டித்தீர்த்த கனமழையால், நேற்று 10 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    வளிமண்டல சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

    புதுவை ரெயின்போநகர், வெங்கட்டாநகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

    புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை 21 செ.மீ. மழை பதிவானது. வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது வழக்கம். அதே போல் நேற்று புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியே வராமல் விடுதியின் உள்ளே முடங்கி கிடந்தனர்.

    நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கின.


    புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இன்று (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த 9.2.1930 அன்று 11.9 செ.மீ மழை பதிவாகி இருந்ததே அதிக அளவு மழையாக இருந்தது. கடந்த 27.2.2000-ம் ஆண்டு 11.7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த 21 செ.மீ. மழையே அதிக அளவில் பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹசீனாபேகம் (வயது 35). மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று பெய்த கனமழையால் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து வரத்தொடங்கியது. நேற்று காலை தனது ஸ்கூட்டரை மீட்டு எடுத்து பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக சென்றார்.

    அப்போது தண்ணீர் அதிகமாக வந்ததால் நிலை தடுமாறி ஹசீனாபேகம் ஓடையில் விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடலூரிலும் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்ணீரை வாரி இறைத்து வெளியேற்றினர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 19 சென்டி மீட்டர் மழை பதிவானது.

    இந்த மழை கடலூரில் வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த மழையானது புதிய வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளது. கடலூரில் இன்று (நேற்று) காலை 8.30 மணி வரை பெய்த மழை 19 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது.

    கடந்த 9.2.1930 அன்று கடலூரில் 11.9 சென்டி மீட்டர் மழை பெய்ததே பிப்ரவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாக இருந்தது. ஆனால் 91 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடிய, விடிய பெய்த கனமழை, முந்தைய சாதனையை முறியடித்தது’ என்றார்.

    கடலூர் அருகே குமளங்குளம் ஏரியில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    பலத்த மழையின் காரணமாக வெள்ளம் ஏரிக்கு பெருக்கெடுத்து வந்தது. இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த நெல் கொள்முதல் நிலையம் மூழ்கியது. நெல் மூட்டைகள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. மேலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மூழ்கி வீணாகி உள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் 550 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், மணிலா, எள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    Next Story
    ×