search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கோட்டை கோவிலில் பிச்சை எடுப்பவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய அடாவடி பெண்

    புதுக்கோட்டை கோவிலில் பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அற நிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி விட்டு செல்கின்றனர்.

    கோவில் அருகே உள்ள பல்லவன்குளத்தில் அமாவாசையன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். கோவில் முன்பும், பல்லவன் குளம் அருகிலும் ஆதரவற்ற முதியவர்கள் அமர்ந்திருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.

    பக்தர்கள் செய்யும் பண உதவி மூலம் முதியவர்கள் உணவு மற்றும் தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து வருகின்றனர். கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தையும் சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அக்கோவிலில் உள்ள புரோகிதரிடம் உதவியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், கோவில் முன்பும், பல்லவன்குளம் அருகிலும் பிச்சை எடுக்கும் முதியவர்களிடம், பிச்சை எடுக்க வேண்டுமென்றால் ரூ.1000 லஞ்சம் தரவேண்டும் என்றும்,இல்லையென்றால் பிச்சை எடுக்கவிடமாட்டேன் என்று மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    அவருக்கு பயந்து ஆதரவற்ற முதியவர் ஒருவர் அந்த பெண்ணுக்கு ரூ.1000 கொடுத்து விட்டு பிச்சை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் என்று மிரட்டவே, இதுகுறித்து அறிந்த பக்தர்கள் சிலர் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரை எச்சரித்து அனுப்பினர். இந்தசம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    Next Story
    ×