என் மலர்
செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார்
நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள சூளேரிக்காட்டு குப்பத்தில் கடற்கரை ஓரம் செயல்பட்டு வரும் கடல் நீர் குடிநீராக்கும் ஆலைக்கு கடல்நீர் கொண்டு வர ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக அங்குள்ள கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு பெரிய, பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டன.
அங்கு கடல் அலையின் வேகத்தை குறைக்க கொட்டப்பட்ட கற்களால் பக்கத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து 50 மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி கரைப்பகுதியை நோக்கி வந்துவிட்டதால் அங்குள்ள மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு விட்டது. 50 மீட்டர் கரைப்பகுதி கடல் நீரால் ஆக்கிரமிக்கப்பட்டு ராட்சத அலை முன்னோக்கி சீறிப்பாய்ந்து வந்து தாக்கியதால் சில நாட்களுக்கு முன்பு 100 மீட்டர் நீளமுள்ள சிமெண்டு சாலை இடிந்து விழுந்து பலத்த சேதம் அடைந்தது.
நெம்மேலி குப்பத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள கரைப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு 20 மீட்டர் தூரத்திற்கு மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அங்குள்ள கடற்கரை ஓரம் உள்ள அம்மன் கோவிலும் கடல் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக நெம்மேலி குப்பம் மீனவர்கள் தங்கள் பகுதியில் மேலும் கடல் அரிப்பு ஏற்படாத வண்ணம் தூண்டில் வளைவு அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நெம்மேலி குப்பத்திற்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் கடல் அரிப்பால் படகு, மீன்பிடி வலைகளை வைக்க இடம் இல்லாமல் தொடர்ந்து தாங்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் உடனடியாக தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் தூண்டில் வளைவு அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்த பிறகு உடனடியாக இந்த கோரிக்கை நிறைவேற்றும் விதமாக இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதி அளித்தார்.
Next Story