என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழன்- வீரத்தமிழன்
    X
    தமிழன்- வீரத்தமிழன்

    சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி

    சிதம்பரம் அருகே மீன்பிடித்து விட்டு திரும்பியபோது படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 43). மீனவரான இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த வீரத்தமிழன் (53), தமிழன் (55), சிங்காரக்குப்பம் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற சுகுமார் (40) ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்துக் கொண்டு நள்ளிரவில் கரை திரும்பினர். அப்போது வெள்ளாற்று முகத்துவாரம் அருகே வந்தபோது, திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் வந்த படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்தது.

    இதில் படகில் வந்த குணசேகரன் உள்ளிட்ட 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து அப்பு மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆனால் வீரத்தமிழன், தமிழன் ஆகியோரின் நிலை என்ன என்று தெரியவில்லை.

    இதையடுத்து அப்பு, குணசேகரன் ஆகியோர் ஊரில் இருந்த சக மீனவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் படகில் சென்று வீரத்தமிழன், தமிழன் ஆகியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வீரத்தமிழன், தமிழன் ஆகியோரின் உடல்கள் முடசல்ஓடை கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் கிடந்தன.

    இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்து வீரத்தமிழன், தமிழன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீன்பிடித்துவிட்டு வந்தபோது படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×