search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது

    வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைதானார். விசாரணையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தது தெரிந்தது.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி ராஜா அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மேரிலதா (வயது 41). இவர், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் அவர், தனது மகனுக்கு வேலையும், தனக்கு வங்கியில் கடன் வாங்கி தரவும் ஆன்லைனில் வந்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு வேலை தருவதாக கூறி என்னிடம் இருந்து சிறுக, சிறுக ரூ.24 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை. இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமலா ரத்தினம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பவம் தொடர்பாக கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (35) என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை கைது செய்து விசாரித்தனர்.

    அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    சாப்ட்வேர் என்ஜினீயரான சந்தோஷ்குமார், கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் வீட்டில் இருந்தே பணி செய்து வருகிறார்.. அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி விட்டார். தனது சம்பள பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.

    அதன்பிறகு சூதாட்டத்துக்கு பணம் அதிகம் தேவைப்பட்டதால் தனது செல்போன் நம்பரை ஆன்லைனில் பதிவு செய்து வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தார். அதை பார்த்து இவரிடம் மேரிலதா தொடர்பு கொண்டபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினார்.

    அதன்பிறகு சந்தோஷ்குமார் இறந்துவிட்டதாகவும், தான் அவரது நண்பர் கார்த்திக் பேசுவதாகவும் கூறி மேரி லதாவிடம் மேலும் பணத்தை கறந்தார். அதன் பிறகு கார்த்திக் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், தான் வேலை மற்றும் லோன் வாங்கி தருவதாகவும் வேறொருவர் போல் பேசி மேரிலதாவிடம் மொத்தம் ரூ.24 லட்சம் வரை வாங்கினார்.

    இவ்வாறு மோசடியில் வாங்கிய பணம் அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார். இதனால் பணத்தேவைக்காக வீடுகளுக்கு அதிகாலையில் பால் பாக்கெட் போடுவது, பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வந்தார். அதில் வந்த வருமானத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்தார்.

    இதுவரை சுமார் ரூ.35 லட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் சந்தோஷ்குமார் இழந்து இருப்பதும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான சந்தோஷ் குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×