search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலத்தில், வெவ்வேறு இடங்களில் வாலிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

    சேலத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜான்சன்பேட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த ஒருவர், மோகனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார்.

    அதில், சம்பவத்தன்று மோகனிடம் பணம் கேட்டு மிரட்டியது பிரபல ரவுடியான ஜான்சன்பேட்டை கண்ணாகாடு பகுதியை சேர்ந்த பரசுராம் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழிப்பறி முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவுடி பரசுராமை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட பரசுராம் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் மகன் சூர்யா (22) என்பவர் அங்குள்ள எம்.ஜி.ஆர். மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த கிச்சிபாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (27) , சூர்யாவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சேலம் டவுன் சின்ன கடை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர், நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்றபோது அவ்வழியே வந்த சேலம் மக்கான் தெருவை சேர்ந்த ஹாஜிகரீம் என்ற காந்தி (50) என்பவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    இது குறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக காந்தியை கைது செய்தார். சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் வாலிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×