search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாமக்கல், சேலம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

    நாமக்கல், சேலம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 15 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒரு பேக்கரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ராசிபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள தனியார் ஆட்டோ சர்வீஸ் உரிமையாளரின் மொபட் ஆகியவை திருட்டு போனது. இதுபற்றி ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு போன மோட்டார் சைக்கிள்களை கண்டு பிடித்து திருடியவர்களை கைது செய்யும்படி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண குமார் மேற்பார்வையில், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ரம்யா மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மீது சந்தேகம் வரவே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் ராசிபுரம், நாமக்கல், சேலம், சின்ன சேலம், ஓமலூர், கள்ளக்குறிச்சி, சேலம் காரிப்பட்டி போன்ற இடங்களில் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் உள்பட 15 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    அதன்பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பாலாஜி நகரைச் சேர்ந்த சர்க்கரை என்கிற சக்கரவர்த்தி (23) என்பதும், இன்னொருவர் சேலம் அருகே உள்ள காரிப்பட்டி பெரிய கவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றி என்கிற சவுந்திரராஜன் (29) என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் சக்கரவர்த்திக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதற்கு முன்பு இருவரும் சென்டரிங் வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 15 மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டுகளை ராசிபுரம் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட சக்கரவர்த்தி மற்றும் சவுந்திரராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×