search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்பானைகளை வாங்கும் பெண்கள்.
    X
    மண்பானைகளை வாங்கும் பெண்கள்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகையில், கரும்பு-மண்பானைகள் விற்பனை மும்முரம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகையில், கரும்பு, மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    நாகப்பட்டினம்:

    தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகையன்று மக்கள், புத்தாடை அணிந்து புது அரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதில் கரும்பு, மஞ்சள்கொத்து உள்ளிட்டவைகளும் இடம்பெறும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு, பெண் வீட்டு சார்பில் பொங்கல் சீர்வரிசை கொடுப்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், நாகை கடை தெரு, நிலா தெற்கு வீதி, நாலுகால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நாகை கடைத்தெருவில் கரும்பு மற்றும்மண்பானை, வாழைத்தார் உள்ளிட்ட பொருட்களை கடந்த சில நாட்களாக பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக ஏராளமானவர்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். கார்களிலும், வேன்களிலும் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால் கரும்பு, மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வந்ததால் கடைவீதியில் கூட்டம் அலைமோதியது.

    இதுகுறித்து கரும்பு வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    மன்னார்குடி, திருக்காட்டுப்பள்ளி மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக நாகைக்கு கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.13-க்கு கொள்முதல் செய்தோம். இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளை ரூ.15-க்கு மொத்தமாக கொள்முதல் செய்துள்ளது. இதனால் தற்போது ஒரு கரும்பு ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்கிறோம். இது போக ஆட்கள் கூலி, போக்குவரத்து செலவும் கூடுதலாக செய்கிறோம். இதனால் இந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.25-க்கு விற்பனை செய்கிறோம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் அதிக அளவில் கரும்பை வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ததால், சிறு வியாபாரிகள் அதிக விலை கொடுத்து கரும்பை கொள்முதல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    அதேபோல இஞ்சி, மஞ்சள் கொத்து கும்பகோணம் மார்க்கெட்டிலிருந்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். மஞ்சள், இஞ்சி கொத்து ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், புயல் கனமழை காரணமாக மண்பாண்ட தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் மண்பானை மற்றும் அடுப்பு, சட்டி உள்ளிட்டவற்றை தயாரிக்கவில்லை. இதனால் ரூ. 100, ரூ.150, ரூ.250 என அளவுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படட மண்பானைகள் தற்போது ரூ.200, ரூ.300 என அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    Next Story
    ×