என் மலர்
செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடுகிறார்கள்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், கொரோனா பரவலால் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் சிலர் ரஜினியின் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், மக்கள் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்களும், ரசிகர்களும் ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு முன்பு திரண்ட ரசிகர்கள், ‘தலைவா முடிவை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தனர். இருப்பினும் ரஜினி தனது முடிவில் மாறாமலேயே உள்ளார்.
இதையடுத்து பேஸ்புக் உள்ளிட்ட வலை தளங்களில் ரஜினி ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்கு அழைத்து தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இதைதொடர்ந்து ரஜினி ரசிகர்கள், தங்களது பலத்தை காட்டும் வகையில் ஓரிடத்தில் கூடி ரஜினியை அரசியலுக்கு இழுப்பதற்காக முடிவு செய்தனர்.
சென்னையில் உள்ள மூத்த நிர்வாகியான ராமதாஸ் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில், நாளை மறுநாள் அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும், மாநில தலைமையும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் ரஜினி ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி நாளை மறுநாள் நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் கார் மற்றும் பஸ்களில் நாளை இரவு சென்னை வருகிறார்கள்.
நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த அறவழிப் போராட்டத்திற்கு சென்னை போலீசார் அனுமதி அளிப்பார்களா? என்பது இன்று தெரிய வரும்.
போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று சென்னையில் உள்ள ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் நுங்கம்பாக்கத்தில் நாளை மறுநாள் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.