search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்றாலை
    X
    காற்றாலை

    கேரள தங்க கடத்தலில் கைதானவர்கள் குமரியில் முதலீடு?- காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

    கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் குமரியில் முதலீடு செய்துள்ளார்களா? என்று கண்டறிய ஆரல்வாய்மொழி காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் சிக்கினார்கள்.

    அதைத்தொடர்ந்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்கள், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 21 பேர்களை கைது செய்தனர். நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 35 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள 3 காற்றாலைகளில் முதலீடு செய்து இருப்பதாகவும், ஒரு சொகுசு பங்களா இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து தங்க கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் குமரியில் முதலீடு செய்துள்ளார்களா? என்று சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று ஆரல்வாய்மொழிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட காற்றாலைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளிகள் பணம் முதலீடு செய்துள்ளனரா? என்று காற்றாலை பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆரல்வாய்மொழி காற்றாலையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×