என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதல் - 2 பேர் பலி

    வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
    வேப்பூர்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் மனைவி அமிர்தவல்லி (73), ரவி மகன் விக்னேஷ்வரன் (32), சுப்பிரமணியம் மனைவி தனம்(62), கார்த்திகேயன் மகள் சசிகலாதேவி, கார்த்திகேயன் மகன் சக்தி சுந்தரம் ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காலை அவர்கள் வீட்டுக்கு திரும்பினார்கள். காரை காளிமுத்து ஓட்டி வந்தார்.

    காலை 8.30 மணிக்கு கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள பாசார் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது காளிமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய காளிமுத்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் இடிபாட்டிற்குள் சிக்கி அமிர்தவல்லி, விக்னேஷ்வரன், தனம், சசிகலாதேவி, சக்தி சுந்தரம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அமிர்தவல்லி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 4 பேருக்கும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×