என் மலர்

  செய்திகள்

  ரஜினிகாந்த்
  X
  ரஜினிகாந்த்

  ரஜினி கட்சி அதிரடி வியூகம்- பூத் கமிட்டி அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினி மக்கள் மன்றத்தினர் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பூத் கமிட்டி அமைக்கும் பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளன.
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31-ந் தேதி புதிய கட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

  ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கொரோனா பரவியதையடுத்து ரஜினிகாந்த் அங்கேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பும் அவர் புதிய கட்சி தொடங்கும் தேதியை அதிரடியாக அறிவிக்கிறார். இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதற்கிடையே ரஜினி மக்கள் மன்றத்தினர் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஊர் ஊராக பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மேற்பார்வையில் இந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன? என்பது பற்றிய விவரங்களை மக்கள் மன்றத்தினர் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  25-ந் தேதிக்குள் மாநில தலைமைக்கு கிடைக்கும்படி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் பூத் கமிட்டி விவரங்களை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

  இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், நாளை முதல் பூத் கமிட்டி தகவல்களை அனுப்ப ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செயல்பட்டு வரும் ரஜினி மக்கள் மன்ற முகவரிக்கு மாவட்ட செயலாளர்கள் இ-மெயில் மூலமாக பூத் கமிட்டி பற்றிய தகவல்களை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

  அதே நேரத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் செயல்படவும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் அதிரடி வியூகத்தை வகுத்துள்ளனர். பூத் கமிட்டியில் 15 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பாகம் வாரியாக வாக்காளர்களை கவர தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியை பற்றியும் எடுத்துக்கூறி வருகிறார்கள். அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் புதிது புதிதாக ஆட்களை மக்கள் மன்றத்தில் சேர்ப்பது போன்ற பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.

  வெளி மாவட்டங்களை விட சென்னையில்தான் அதிக அளவில் ரஜினி கட்சியில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் தினமும் மக்கள் மன்றத்தில் சேர்ந்து கொண்டே இருப்பதாக தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

  இந்த மாவட்டத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகளில் இதுவரை 600 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  ரஜினியின் புதிய கட்சி அறிவிப்புக்கு பிறகு இப்போது இருப்பதைவிட மக்கள் மத்தியில் மேலும் ஆர்வம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் புதிய வருடம் பிறந்த பிறகு அனைத்து கட்சிகளில் இருந்தும் மக்கள் வந்து சேர உள்ளனர் என்றும் மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களே ரஜினி கட்சியில் இணைய ஆர்வமாக இருப்பதாகவும் மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

  Next Story
  ×