என் மலர்
செய்திகள்

முன்னாள் நீதிபதி கர்ணன்
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மேலும் ஒரு வழக்கில் கைது
ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஒருவர் வீட்டில் ரகளை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
சென்னை:
இந்த வழக்கில் கர்ணனின் ஆதரவாளர்கள் மனோகரன், பிரகாஷ், குப்பன், ஏகாம்பரம், விஜயராகவன் ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சென்னை மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கர்ணன். சென்னை ஆவடியில் வசித்தார். சில நீதிபதிகளின் குடும்பத்தினர் பற்றியும், பெண் வக்கீல்கள் சிலர் பற்றியும் அவதூறு கருத்துக்களை வீடியோவாக பதிவிட்டுள்ளதாக கர்ணன் மீதும், அந்த வீடியோவை பரவ விட்டவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மீது சென்னை மத்தியகுற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்த அவர் மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வசிக்கும் ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஒருவர் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் ரகளையில் ஈடுபட்டதாக கர்ணன் மீது திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மனு அடிப்படையில் கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கிலும் கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய வாரண்டு பெற்று இந்த வழக்கில் கர்ணன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கர்ணனின் ஆதரவாளர்கள் மனோகரன், பிரகாஷ், குப்பன், ஏகாம்பரம், விஜயராகவன் ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Next Story