என் மலர்
செய்திகள்

நகை பறிப்பு
காரைக்குடி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்ட மூதாட்டியிடம் நகை பறிப்பு
காரைக்குடி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்ட மூதாட்டியிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கீழ மேல் வீதியைச் சேர்ந்தவர் வீரசேகரன். இவர் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தெய்வானை (வயது 71). இவர்களது மகன்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவிலும் மற்றொருவர் பெங்களூருவிலும் உள்ளனர். பள்ளத்தூர் வீட்டில் வீரசேகரனும் தெய்வானையும் மட்டுமே உள்ளனர்.
மார்கழி மாதம் கோவில்களில் அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சி நடைபெறுகிறது. இதனால் தெய்வானை அதிகாலை 4.30 மணி அளவில் எழுந்து வீட்டின் வாசலை தெளித்து கோலமிடுவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை அவர் எழுந்து வீட்டு வாசல் முன்பு கோலமிட்டு கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தெய்வானை வீட்டு அருகே நிறுத்தினர். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு ஆசாமி கீழே இறங்கினான். வெளியே கோலம் போட்டு கொண்டு இருந்த தெய்வானை பயந்து வீட்டிற்குள் செல்ல முயன்றார்.
உடனே அந்த ஆசாமி, தெய்வானை கழுத்தில் கிடந்த நகையை பறித்தான். உடனே தெய்வானை திருடன், திருடன் என சத்தம் போட்டார். ஆனால் ஆசாமி நகையை பறித்து கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். திருடனுடன் போராடியதில் தெய்வானையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. பறிபோன நகை வைரம் பதிக்கப்பட்ட 8 பவுன் ஆகும். அதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
Next Story






