என் மலர்
செய்திகள்

தனியார் மருத்துவமனை முன்பு போராட்டம் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் புறக்கணிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை டாக்டர்கள் புறக்கணித்தனர்.
புதுக்கோட்டை:
ஆயுர்வேத டாக்டர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தற்கு நாடு முழுவதும் அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் கடந்த 8-ந் தேதி இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நேற்று புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் புறக்கணித்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை. புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனைகளில் முன்பு போராட்டம் தொடர்பான அறிவிப்பு சுவரொட்டியை ஒட்டி வைத்திருந்தனர். புதிய பஸ் நிலையம் அருகே ஒரு மருத்துவமனை முன்பு நுழைவு வாயில் கதவு சாத்தப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு டாக்டர்கள் போராட்டம் குறித்து அங்கிருந்த ஊழியர்கள் எடுத்துரைத்தனர். இதனால் சில நோயாளிகள் உரிய சிகிச்சை பெறமுடியாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அரசு மருத்துவமனைகள் வழக்கம் போல இயங்கின. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள், கொரோனா சிகிச்சையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சலீம் கூறுகையில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 85 தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்கில் புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் மேற்கொள்ளப்படவில்லை. 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆதரவு தெரிவித்தனர்' என்றார்.
Next Story






