search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தொடர் மழை- அடர்ந்த மேகமூட்டம்: நீலகிரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று காலையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது.
    ஊட்டி:

    கொரோனா பொதுமுடக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

    சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதுமலையை தவிர அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. 8 மாதங்களாக முடங்கியிருந்த பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்தனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிங்கார, கரன்சி, அடர்லி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மாஸ் மற்றும் சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    இதுதவிர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், கேன்ஹில் மலைப்பாதை, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டியது.

    இதனால் அனைத்து ஓட்டல், தங்கும் விடுதி, வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். நேற்று காலை ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய பரவலாக கனமழை பெய்தது. காலையும் தொடர்ந்து அடர்ந்த மேகமூட்டம், கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை காட்சி முனையில் இருந்து கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அடர்ந்த மேகமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.

    தொடர் மழையால் ஊட்டி கூடலூர் சாலை பட்பயர் என்ற இடத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனையடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

    இதேபோன்று குன்னூர் சித்தி விநாயகர் கோவில் அருகே ஜெகதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் அவரது உறவினர் ஜீவிதா தனது மகனுடன் வசித்து வருகிறார். மழை பெய்தபோது வீட்டில் இருந்தார். அப்போது வீட்டில் கல் விழுவதுபோல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவிதா தனது மகனுடன் வெளியே ஓடினார். அவர்கள் வெளியேறிய சில வினாடிகளில் வீடு முற்றிலும் விழுந்து தரைமட்டமானது.

    அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வீடும் மழைம் இடிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இன்று காலையும் தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது.
    Next Story
    ×