என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமராஜா பேசிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
    X
    விக்கிரமராஜா பேசிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்- விக்கிரமராஜா கோரிக்கை

    புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது போல பாதிப்படைந்த சிறு வியாபாரிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
    விருதுநகர்:

    விருதுநகரில் மாவட்ட பேரமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விருதுநகரில் மாவட்டத்தில் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விருதுநகருக்குள் நெடுந்தூர பஸ்கள் வராமல் நான்கு வழிச்சாலையில் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி, நெல்லை போன்ற நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பு பணிகளுக்காக கடைகள் அகற்றப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் முடியவில்லை. இதனால் வியாபாரிகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடைகள் கட்டுமான பணியை முடிக்க உறுதி அளிப்பதோடு, வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாவிட்டால் கடைகளை அகற்ற ஒத்துழைப்பு அளிக்காமல் போராட வேண்டியது வரும்.

    மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

    இதுகுறித்து ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. புயல் பாதிப்பால் விவசாயிகளை போன்று சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நாளை நாமக்கல்லில் நடைபெற உள்ள பேரமைப்பு மாநாட்டில் விவசாய சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
    Next Story
    ×