search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு செல்லும் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை பஸ் நிற்கும் இடம் காலியாக உள்ளது.
    X
    சென்னைக்கு செல்லும் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை பஸ் நிற்கும் இடம் காலியாக உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் விடாமல் பெய்யும் தொடர் மழை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு செல்லும் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டன.
    திருவண்ணாமலை:

    ‘நிவர்’ புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து மழை விட்டு, விட்டு பெய்தது. இதையடுத்து காலை சுமார் 10 மணியிலிருந்து விடாமல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. அத்தியாவசிய பணிக்கு வெளியில் செல்பவர்கள் குடைபிடித்தபடியே செல்கின்றனர். இந்த தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

    புயல் முன்னெச்சரிக்கையால் பாதிப்புகளை தடுக்கும் பணியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லைன் எந்திரங்கள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தீயணைப்பு துறையில் பேரிடர் தடுப்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நேற்றும் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் சென்னைக்கு செல்லும் பஸ்களும் அடியோடு நிறுத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    செங்கம் பகுதியில் நிவர் புயலின் காரணமாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. நேற்று பகல் பொழுதில் செங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சாரல் மழை ஆங்காங்கே செய்து கொண்டிருந்தது. மேலும் நிவர் புயல் காரணமாக செங்கம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதேபோல் நேற்று செங்கம் உழவர் சந்தையில் பொதுமக்கள் புயல் எச்சரிக்கை காரணமாக தங்களுக்கு தேவையான காய்கறிகளை முன்கூட்டியே வாங்கி சென்றனர். செங்கம் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
    Next Story
    ×