என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கடலூர் வழியாக கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கடலூர் வழியாக கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ரெயில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது பொது போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. இருப்பினும் ரெயில் சேவையை பொறுத்தவரை பயணிகள் ரெயில் முற்றிலும் இயக்கப்படவில்லை. மேலும் சுமார் 13 கொரோனா கால சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே இந்த ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
திருச்சியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு சோழன் எக்ஸ்பிரசும், ராமேசுவரத்தில் இருந்து புவனேஸ்வருக்கு வாராந்திர சிறப்பு ரெயிலும் மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால் இதுவரை தென்மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரசும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், கடலூர் வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் நீண்ட தூரத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட ரெயில் நிலையத்துக்கும், விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கும் செல்ல வேண்டி உள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, பலதரப்பட்ட மக்களை கடந்து சென்று ரெயில் ஏறும் போது தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.
எனவே கடலூர் மாவட்ட மக்களின் நலன்கருதி கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், வேளாங்கண்ணிக்கும், சென்னைக்கும் கடலூர் வழியாக கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கும்படி ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






