search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி
    X
    கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி

    வணிக நிறுவனங்களில் கூட்டம் கூட அனுமதித்தால் சீல் - கலெக்டர் எச்சரிக்கை

    கொரோனா 2-வது அலைக்கு தற்போது வாய்ப்பு இல்லை. வணிக நிறுவனங்களில் கூட்டம் கூட அனுமதித்தால் சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 590 பேருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 23 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் தற்போது தொற்று உறுதியாகி 281 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும் நாம் நோய் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் இருக்கிறதா? என்று சோதனை செய்து, அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கண்காணித்து, அங்கு சென்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம்.

    இது வரை 30 ஆயிரம் காய்ச்சல் முகாம் நடத்தி, 12 லட்சம் பேரை சோதனை செய்து உள்ளோம். தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் அதிக காய்ச்சல் முகாம் நடத்தி உள்ளோம். கடந்த ஜூன் மாதம் 500 பேருக்கு பரிசோதனை என ஆரம்பித்ததில் 40, 50 பேருக்கு பாதிப்பு இருந்தது. ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 1700 முதல் 3 ஆயிரத்து 500 பேர் வரை பரிசோதனை செய்ததில், 500 பேர் முதல் 250 பேர் வரை பாதிப்பு இருந்தது.

    தற்போதும் அதே எண்ணிக்கையில் பரிசோதனை செய்து வருகிறோம். ஆனால் 50-க்கும் குறைவான நபர்களுக்கு தான் பாதிப்பு உள்ளது. . கடலூர் மாவட்டம் எடுத்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா 2-வது அலைக்கு தற்போது வாய்ப்பு இல்லை.

    தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் வணிக நிறுவனங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டும் வணிக நிறுவனங்களுக்குள் அனுமதித்தால் நல்லது. இதை மீறி வணிக நிறுவனங்களில் கூட்டம் கூடினால், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல், முக கவசம் அணியாமல் செல்லுதல் போன்ற உத்தரவை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். ஆகவே அரசு உத்தரவை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

    Next Story
    ×