search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காட்பாடி அருகே போலி பெண் டாக்டர் கைது

    காட்பாடி அருகே அலோபதி முறையில் சிகிச்சை அளித்த பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். அவரின் கிளினிக்குக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
    வேலூர்:

    காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மினுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று பிரம்மபுரத்தில் உள்ள கிளினிக்குகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பிரம்மபுரம் திருவள்ளுவர் தெருவில் உள்ள கிளினிக்கில் பொதுமக்களுக்கு அலோதிபதி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில், அந்த கிளினிக்கை நடத்தி வருபவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்று தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள், அவரின் மருத்துவ படிப்பு சான்றிதழை சோதனை செய்தனர். அதில், அவர் சித்தா மற்றும் ஹோமியோபதி படித்திருப்பது தெரியவந்தது. விஜயகுமாரி அலோபதி முறையில் சிகிச்சை அளித்ததால் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கிளினிக்கை பூட்டி வருவாய்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விஜயகுமாரியை காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், விஜயகுமாரி கொடுத்த சித்தா மற்றும் ஹோமியோபதி சான்றிதழில் கல்லூரியின் முத்திரை இல்லை. எனவே அந்த சான்றிதழ் போலியாக இருக்க வாய்ப்புள்ளது. அவரின் மருத்துவ சான்றிதழின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம். விஜயகுமாரி நர்சிங் முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்ததாகவும், அந்த அனுபவத்தின் அடிப்படையில் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தார் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 3 முறை நடத்திய ஆய்வில் தப்பிய விஜயகுமாரி தற்போது சிக்கியுள்ளார் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×