search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன?

    சட்டபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் மொத்த தொகுதிகளில் சரி பாதிக்கு பெண் வேட்பாளர்களை நிறுத்த சீமான் திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி கதவை திறந்து வைத்து மற்ற கட்சிகளுக்காக காத்திருக்கிறது.

    இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

    2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை.

    இந்த 2 தேர்தல்களிலும் சீமான், காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்தார். ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தை தோலுரித்து காட்டுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய சீமான், 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை ஆதரித்தார்.

    இதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சி சந்தித்த முதல் தேர்தல் ஆகும்.

    இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகளை பெற்றனர். 1.07 சதவீத வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தது.

    2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி களம் இறங்கியது.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதி சட்டமன்றத் தேர்தலையும் அக்கட்சி தனித்து சந்தித்தது.

    இதன்படி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்து சந்திக்க உள்ளது.

    இதற்காக சீமான் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் மொத்த தொகுதிகளில் சரி பாதிக்கு பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தி வருகிறது.

    அதன்படி வருகிற சட்டமன்ற தேர்தலிலும் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் மிகவும் முக்கியமானது தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்பது ஆகும்.

    இதன் காரணமாகவே ரஜினிகாந்த் வெளி மாநிலத்தவர் என்று தொடர்ந்து சீமான் விமர்சித்து வருகிறார். இந்த கோ‌ஷத்துடனும், ஈழ ஆதரவு நிலைப்பாட்டுடனும் நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    Next Story
    ×