search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடலூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது

    கடலூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    நடுவீரப்பட்டு அருகே உள்ள சாத்தமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பஞ்சன் (வயது 47). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முந்திரிதோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பஞ்சனுக்கும், அவரது உறவினர் சசிக்குமார் என்பவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், பின்னர் சமாதானம் ஆவதுமாக இருந்துள்ளனர்.

    சம்பவத்தன்று பஞ்சன், சசிக்குமார், ஜெய்பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் சேர்ந்து மது குடித்துள்ளனர். பின்னர், முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த சசிக்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து கயிற்றால் பஞ்சனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, பஞ்சன் தூக்குப்போட்டு கொண்டதாக நம்ப வைக்கும் வகையில் அங்குள்ள மரத்தில் அவரை தூக்கில் தொங்க போட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து மாசிலாமணி மகன் சசிக்குமார்(28), செஞ்சிவேல் மகன் ஜெயபிரகாஷ் என்கிற பிரகாஷ்(25) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 2 பேர் மீதும் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களது தொடர் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார். அதன் பேரில் சிறையில் உள்ள சசிக்குமார், பிரகாஷ் ஆகியோரிடம் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தூக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்தவர் தனசேகரன் (37). இரும்பு வியாபாரி. கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்(26) மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனசேகரனை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த ஜாக் என்கிற ஜெகனை (32) புதுச்சேரி மாநில போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சிறுபாக்கம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரியாயி அம்மன் கோவில் அருகே சித்தேரியை சேர்ந்த ராயபிள்ளை மகன் மருதமுத்து(27), சாராயத்தை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, மருதமுத்துவை கைது செய்தனர். இவர் மீது 4 வழக்குகள் உள்ளன.

    இதனால் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெகனை குண்டர் சட்டத்திலும், மருதமுத்துவை தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, ஜெகனை குண்டர் சட்டத்திலும், மருதமுத்துவை தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சிறையில் உள்ள ஜெகனிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலும், மருதமுத்துவிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான நகலும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×