search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அந்தியூர் அருகே முதியவர் கொலை- தொழிலாளி கைது

    அந்தியூர் அருகே முதியவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார் நேற்று அதிகாலை பவானி ரோட்டில் ரோந்து சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது மொபட்டுடன் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார்.

    உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் சில கேள்விகளுக்கு சரியாகவும், சில கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாகவும் பதில் கூறினார். இந்த விசாரணையில் அவர் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 47). என்பது தெரிந்தது. மேலும் அவரே தான் ஒருவரை கொலை செய்து நீரோடையில் பிணத்தை போட்டுவிட்டதாகவும் கூறினார்.

    தங்கவேல் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அருகே உள்ள கந்தாம்பாளையம் நீரோடைக்கு அவரை அழைத்து சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. மேலும் அவரின் உடலில் பல காயங்கள் இருந்தன.

    இதனால் தங்கவேலிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ‘அவர் அந்த பகுதியில் நடந்து வந்துகொண்டு இருந்ததாகவும், அப்போது முன்னால் சென்றுகொண்டு இருந்த முதியவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்து வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டதாகவும்‘ கூறினார்.

    ஆனால் தங்கவேல் ஏன் அதிகாலை நேரம் அங்கு வந்தார். கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? அவர் ஏன் அங்கு வந்தார்? தங்கவேல் ஆத்திரப்படும் வகையில் அவர் என்ன சொன்னார்? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து முதியவரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

    பின்னர் தங்கவேலின் மனைவி சுதா (40) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் சுதா, என் கணவர் கோவிலில் நடைபெறும் யாக பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்து விற்பனை செய்து வந்தார். கூலி வேலைக்கும் செல்வார்.

    இந்தநிலையில் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் 10 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் நான் கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் என் மகனை அழைத்துக்கொண்டு காட்டுப்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தங்கவேலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×