search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு 4 வாரத்துக்குள் விசாரணை நடத்தும்- கலெக்டர் தகவல்

    யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு 4 வாரத்துக்குள் விசாரணை நடத்தும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என்று வக்கீல் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. மேலும் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை காலி செய்து கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து கட்டிட உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். எனினும் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து 39 தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு யானை வழித்தடங்களை ஆக்கிரமிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்தது. மேலும் தங்கும் விடுதி உரிமையாளர்களின் ஆட்சேபனைகளை அறிந்துகொள்ள விசாரணை குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது நீலகிரியில் யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது. யானை வழித்தடங்களில் 800 வீடுகள் உள்ளதாக ஏற்கனவே ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    யானை வழித்தட ஆக்கிரமிப்பில் உள்ள தங்கும் விடுதிகளை அகற்றுவது குறித்து அதன் உரிமையாளர்களின் ஆட்சேபனைகளை அறிந்துகொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 4 வாரங்களுக்குள் நீலகிரிக்கு வந்து, விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குழுவினர் விசாரணை நடத்திய பின்னரே மேலும் விவரங்கள் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×