search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் அரிசி பறிமுதல்
    X
    ரேஷன் அரிசி பறிமுதல்

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 182 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    இந்தாண்டில் இதுவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 182 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் 35 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பிற மாநிலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்கும்படி மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு தலைமையில் பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் அந்தந்த தாலுகா வழங்கல் அலுவலர்கள் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்திருக்கும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறார்கள். அதேபோன்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரும் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். வாகன தணிக்கை மற்றும் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை பிற மாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தி செல்ல முயன்றது மற்றும் வீடுகளில் பதுப்பி வைத்திருந்தது என்று 182 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.

    இது தொடர்பாக 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் என்று ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதைத்தவிர ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்திய 60 சமையல் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×