search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை
    X
    ஸ்டெர்லைட் ஆலை

    ஸ்டெர்லைட் ஆலையால் கடுமையான மாசு ஏற்பட்டது நிரூபணம்- சுப்ரீம் கோர்ட்டில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில்

    ஸ்டெர்லைட் ஆலையால் கடுமையான மாசு ஏற்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் நச்சுபுகைகளால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆலையை மூடவேண்டும் என்று கூறி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

    இதை எதிர்த்தும் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசும் வழக்கு தொடர்ந்தது.

    தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிக்கையின்படி ஆலையை திறக்க அனுமதி வழங்கியது.

    இதனை எதிர்த்து தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுதாக்கல் செய்தது.

    இந்த வழக்கில் ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது.

    இதையடுத்து வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் ஆலையை திறக்கக்கோரி மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க விதிக்கப்பட்ட தமிழக அரசின் தடை தொடரும் எனவும் தெரிவித்தனர்.

    இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி விசாரித்த நிதிபதிகள், தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்ததது.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வக்கீல் யோகேஷ் கன்னா 238 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தார்.அதில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டைர்லைட் ஆலையால் கடுமையான மாசு ஏற்படுகிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வி‌ஷயத்தில் வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறி வருகிறது.

    அந்த ஆலை தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்கவில்லை. கடந்த காலங்களில் கோர்ட்டில் ஒப்புக்கொண்டதை மேல்படுத்தவில்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஒருதலை பட்சமாக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளதாக குற்றம் சாட்டுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

    இது தவறான போக்காகும். எனவே வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×