search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் கொரோனா சிகிச்சை மையத்தில் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருந்த நோயாளிகள்
    X
    திருப்பத்தூர் கொரோனா சிகிச்சை மையத்தில் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருந்த நோயாளிகள்

    சிகிச்சை முகாமில் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருக்கும் கொரோனா நோயாளிகள்

    திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டம் பாட்டத்துடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனால் சிகிச்சைக்கு வந்ததாகவே தெரியவில்லை என நோயாளிகள் தெரிவித்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் நோயாளிகளுக்கு 8 வடிவ நடைபயிற்சி, யோகா, சிறுதானிய உணவுகள், மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. மேலும் இங்கு சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 5 நாட்களில் குணமடைந்து செல்கின்றனர்.

    இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க ஆடல் பாடல், நிலா சோறு, வேப்பிலை ஊஞ்சல் உள்ளிட்ட சிகிச்சைகளை அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் உள்ளிட்ட சித்த மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். மேலும் வைரஸ் தொற்றை மறந்து நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் டாக்டர் விக்ரம்குமார் கவச உடை அணிந்து நோயாளிகளுடன் சினிமா குத்து பாடலுக்கு நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவருடன் நோயாளிகளும் நடனமாடி மகிழ்கின்றனர்.

    இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘நாங்கள் இப்போது இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளோம் என்பதை மறந்து மன அழுத்தத்தை போக்க இரவு நேரங்களில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நடன நிகழ்ச்சியை நாங்கள் கண்டுகளித்து ஆடிப்பாடி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். கொரோனா சிகிச்சைக்கு வந்த மாதிரியே தெரியவில்லை. விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

    கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தைப் போக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சிகிச்சை அளித்துவரும் டாக்டர்களை கலெக்டர் சிவன்அருள் பாராட்டினார்.
    Next Story
    ×