search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கடலூர் கலெக்டர்
    X
    கடலூர் கலெக்டர்

    தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அனுமதி பெற்றுத்தர உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்

    கடலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அனுமதி பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதை, எளிமையாக்குவதற்கு தொழில் வணிகத்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து http://easy-bus-i-ness.tn.gov.in/msme என்ற இணையதள முகவரியில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இதன் மூலம் தொழில் முனைவோர்கள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினரிடம் இருந்து புதிய உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், நகர ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில் இருந்து மனை அல்லது கட்டிட வரைபட அங்கீகாரம், மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய மின் இணைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்று மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் ஆகியவற்றுக்கான சேவைகளை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பெறலாம்.

    இதனால் தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லா சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். எனவே, கடலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிமங்கள் பெற மற்றும் புதுப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் உடனே அனுமதி பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுதொடர்பான விவரங்களை கடலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
    Next Story
    ×