search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா கூடுதல் சிகிச்சை மையத்தை படத்தில் காணலாம்.
    X
    கொரோனா கூடுதல் சிகிச்சை மையத்தை படத்தில் காணலாம்.

    கொரோனா கூடுதல் சிகிச்சை மையங்களில் நோயாளிகள் இல்லை

    கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் கூடுதல் சிகிச்சை மையங்களில் நோயாளிகள் ‘அட்மிஷன்‘ இல்லாமல் அரசு மருத்துவமனையில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆண்டி முதல் அரசன் வரை தாக்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தொற்று பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்பு இருந்ததை விட தற்போது தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளன.

    தினமும் சராசரியாக 3 இலக்க எண்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது இரட்டை இலக்க எண்களில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது கூடுதல் படுக்கை வசதிகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டன. புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்திலும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் ராணியார் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் மட்டும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. கூடுதலாக அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையங்களில் தற்போது ‘அட்மிஷன்‘ இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

    மேலும் ஒரிரு நோயாளிகளுக்காக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கவும் தற்போது ‘அட்மிஷன்‘ போடுவதில்லை. மாறாக ராணியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்திலும் போதுமான படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகள் இருப்பதால் நோயாளிகள் அனைவரும் அங்கு அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
    Next Story
    ×