search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி மவுனிகா, போலீஸ்காரர் மகேஷ்வரன்
    X
    மாணவி மவுனிகா, போலீஸ்காரர் மகேஷ்வரன்

    நீட் தேர்வில் சென்னை மாணவிக்கு மனிதநேயத்துடன் உதவிய போலீசார்

    நீட் தேர்வு எழுத வந்த சென்னை மாணவி அசல் ஆதார் அட்டை சான்றினை கொண்டு வர தவறியதால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த போலீசார் மனிதநேயத்துடன் உதவியதால் தேர்வு எழுதினார்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று ‘நீட்’நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தில் 219 மாணவிகளும், 116 மாணவர்களும் என மொத்தம் 335 பேர் நீட் தேர்வை எழுதினார்கள். நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவரும் கடுமையான பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    முதல் கட்ட சோதனையின்போது, சென்னை புரசைவாக்கத்தில் இருந்து தனது தாயாருடன் வந்திருந்த மவுனிகா (வயது 17) என்ற மாணவி அடையாளத்திற்கான தனது ஆதார் அட்டையின் நகலை அதிகாரிகளிடம் காண்பித்து உள்ளார். இதனை ஏற்காத அதிகாரிகள், ஆதார் அசல் சான்றை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என மவுனிகாவிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் பதட்டமடைந்த மவுனிகா வேதனையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசும், இன்ஸ்பெக்டர் சக்திவேலும் அந்த மாணவியையும், அவரது தாயையும் அழைத்து விசாரித்தனர்.

    அப்போது மயிலாப்பூரில் உள்ள அரசினர் மகளிர் பள்ளியில் தான் படித்து வருவதாகவும் தேர்வுக்கு அசல் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வர மறந்து விட்டதையும் மாணவி மவுனிகா போலீசாரிடம் தெரிவித்தார்.

    மேலும், ஆதார் அட்டையை இணையதள மையத்தில் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனையடுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய இரண்டாம் நிலை போலீஸ்காரர் மகேஷ்வரன்(24) என்பவர் மாணவியின் தாய் ஷீலாவை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை புரசைவாக்கத்திற்கு அழைத்து சென்றார்.

    அங்கிருந்து அசல் ஆதார் அட்டையுடன் 1½ மணி நேரத்தில் போலீஸ்காரர் மகேஸ்வரன் நீட் தேர்வு மையத்திற்கு மின்னல் வேகத்தில் திரும்பி வந்தார். பிற்பகல் 1.15 மணிக்கு ஆதார் அட்டையை போலீஸ் காரர் மகேஸ்வரன் மாணவி மவுனிகாவிடம் ஒப்படைக்க அவர் 1.30 மணியளவில் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.

    குறித்த நேரத்தில் ஆதார் அட்டை கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகமாக மாணவி தேர்வு எழுதச் சென்றார். இதுகுறித்து மாணவி மவுனிகா கூறுகையில், போலீசாரின் உதவியால் எனது மருத்துவகனவு சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதற்கு நன்றி. இதனால் மிகவும் உற்சாகத்தில் நல்ல முறையில் நீட் தேர்வை எதிர் கொண்டு எழுதி உள்ளேன்’ என்றார்.

    நீட் தேர்வு மையத்தில் சென்னை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலில் போலீசாரின் மனிதநேயமிக்க செயல் அங்கு வந்திருந்த பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. மேலும் தேர்வு முடிவடைந்ததும் தனது மோட்டார் சைக்கிளிலேயே மாணவி மவுனிகாவை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பத்திரமாக போலீஸ்காரர் மகேஷ்வரன் அழைத்து சென்று விட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×