என் மலர்
செய்திகள்

அருப்புக்கோட்டையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கைதான நில அளவையாளர்- உதவியாளர் ஜெயிலில் அடைப்பு
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவர் தனது வீட்டிற்கு பட்டா மாறுதல் கோரி நகராட்சி அலுவலகத்தில் நில அளவையாளர் சிவ சங்கரனிடம் மனு செய்தார்.
அதற்கு அவர் ரூபாய் 12 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து சின்ன முத்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. கருப்பையா தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் பூமிநாதன், விமலா மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு மறைந்திருந்த போலீசாரை கவனிக்காத சிவசங்கரன், சின்னமுத்து கொண்டுவந்த ரூ 12 ஆயிரத்தை தனது உதவியாளர் சூரிய நாராயணனிடம் கொடுக்கும்படி கூறினார்.
சின்னமுத்து லஞ்ச பணத்தை சூரிய நாராயணனிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். சிவசங்கரன் மற்றும் அவருடைய உதவியாளர் சூரிய நாராயணன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்ரேட் 2 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்திரவிட்டார். இதையடுத்து அவர்கள் விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.