search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் பெய்த தொடர் மழையால் வயலில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    தஞ்சையில் பெய்த தொடர் மழையால் வயலில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    தஞ்சையில் 2-வது நாளாக மழை- வீதிகளில் ஓடும் கழிவுநீர்

    தஞ்சையில் 2-வது நாளாக நேற்று மழை பெய்ததால் கழிவுநீருடன், தண்ணீரும் கலந்து வீதிகளில் ஓடியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்கிறது. தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. தஞ்சையில் நேற்று காலையில் வெயில் கொளுத்தியது. பிற்பகலில் கருமேகங்கள் திரண்டு வந்தன. சிறிதுநேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 30 நிமிடம் நீடித்தது. 2-வது நாளாக பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சாலையோர கடை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தெற்குவீதி, வடக்குவீதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜிசாலை இர்வின்பாலம் அருகே பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளிவந்தது. இந்த கழிவுநீர், மழைநீருடன் கலந்து ராணிவாய்க்காலில் சென்று சேர்ந்தது.

    அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை நெல்பயிர்கள் மழையால் சாய்ந்தது. அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லும் நனைந்தது. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்தனர். அவ்வப்போது பெய்யும் மழையினால் தஞ்சை எம்.கே.மூப்பனார்சாலை, தஞ்சை-நாகை சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    தஞ்சை-38, திருக்காட்டுப்பள்ளி-32, அய்யம்பேட்டை-28, கல்லணை-19, திருவிடைமருதூர்-18, பூதலூர்-18, பாபநாசம்-17, மஞ்சலாறு-16, வல்லம்-16, அணைக்கரை-14, திருவையாறு-10, கும்பகோணம்-10, ஈச்சன்விடுதி-10, பேராவூரணி-10, பட்டுக்கோட்டை-6, அதிராம்பட்டினம்-5, மதுக்கூர்-2, நெய்வாசல்தென்பாதி-2, வெட்டிக்காடு-2, குருங்குளம்-1.
    Next Story
    ×