என் மலர்
செய்திகள்

சூலூரில் 2 சிறுவர்கள் சூடு வைத்து சித்ரவதை- யோகா மாஸ்டர் கைது
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 46). யோகா மாஸ்டரான இவர் அதே பகுதியில் யோக மையம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்து 2 சிறுவர்கள் ஓடிவந்து அங்கிருந்த பொதுமக்களிடம் தங்களை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் யோகா மையத்திற்கு சென்று ஜெகநாதனிடம் இது குறித்து கேட்டனர். அப்போது அவர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து பொதுமக்கள் சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த சிறுவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவர்கள் சேலத்தை சேர்ந்த காட்டுதுறை (10) மற்றும் துரைப்பாண்டி (14) என்பது தெரியவந்தது.
அவர்களை ஜெகநாதன் படிக்க வைப்பதாக அழைத்து வந்து கட்டிட வேலை செய்ய சொல்லி சித்ரவதை செய்ததாகவும், செய்யவில்லை என்றால் அடித்து துன்புறுத்தி சூடு வைத்ததாகவும் இந்த சிறுவர்கள் கதறி அழுதவாறு கூறினர்.
இதையடுத்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகநாதனை கைது செய்து மேலும் இது போன்று சிறுவர்களை அவர் சித்ரவதை செய்துள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.