search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலை தேடி குமரிக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு - விடிய, விடிய உயிருக்கு போராடிய பரிதாபம்

    வேலை தேடி குமரிக்கு வந்த 2 பேரை வழிப்பறி கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. உதவிக்கு யாருமின்றி அவர்கள் விடிய, விடிய உயிருக்கு போராடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆரல்வாய்மொழி:

    திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் சிவா (வயது 39), புரோட்டா மாஸ்டர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவித்து வந்தார்.

    தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கியதால் சிவா பஸ் மூலம் நேற்று முன்தினம் மாலை நெல்லை மாவட்டம் காவல்கிணறு வந்தார். அங்கு பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்காததால் நடைபயணமாக ஆரல்வாய்மொழி, தோவாளைக்கு வந்து வேலை தேடினார். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை. இரவானதால் தோவாளை பஸ் நிறுத்தம் அருகே படுத்திருந்தார்.

    நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்களை கண்டதும் சிவா எழுந்தார். அதற்குள் அந்த ஆசாமிகள் மிளகாய்பொடியை சிவா மீது தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம், பை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    பின்னர், சிவா ரத்தம் வடிந்த நிலையில் நடந்தே சகாயநகர் பஸ் நிறுத்தத்துக்கு வந்தவர் மேற்கொண்டு நடக்க முடியாததால் அங்கேயே படுத்தார். அதிகாலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவு நேரத்தில் உதவிக்கு யாரும் இல்லாததால் வெட்டுக்காயம் அடைந்த நபர் ரத்தம் சொட்ட, சொட்ட சாலையோரம் படுத்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல், ஆரல்வாய்மொழி-பூதப்பாண்டி சாலையில் அவ்வையார் அம்மன் கோவில் பகுதியில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது பெயர் ராஜேஷ்வரன் என்பதும், கோயம்புத்தூரில் இருந்து வேலை தேடி வந்த போது ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி தன்னிடம் இருந்த பொருட்களை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், ஆரல்வாய்மொழி (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கஞ்சா போதையில் இருந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், தோவாளை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×